சனி, 17 டிசம்பர், 2016

சொந்த முயற்சி:அன்றாடம் 8 முதல் 10 மணி நேரம்வரை படித்தேன்.

பயிற்சியைவிட சொந்த முயற்சி

கரூரைச் சேர்ந்த முத்துகுமாரசாமி முழுக்கத் முழுக்க தமிழ்வழிக் கல்வி மூலம் பள்ளிப் படிப்பை முடித்தார். மருத்துவம் படிக்க ஆசைப்பட்டபோது முதல் முயற்சியில் கிடைக்கவில்லை. அதிக மதிப்பெண் பெற மறுதேர்வு எழுதி 1994-ல் தேர்வாகிச் சென்னையின் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். இக்கல்லூரி யூ.பி.எஸ்.சி. தேர்வாளர்களுக்குப் பெயர் பெற்றது. நாடு முழுவதிலும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளாகப் பொறுப்பேற்றவர்கள் அந்தக் கல்லூரிக்கு வந்து மாணவர்களை ஊக்குவிப்பது வழக்கம். இப்படித்தான் முத்துவுக்கும் யூ.பி.எஸ்.சி. எழுதும் ஆர்வம் வந்தது.

ஆனால் முதல் முறை பெயரளவுக்கு மட்டும் எழுதியதால் முதல்நிலையில்கூட வெல்ல முடியவில்லை. பின்னர், புவனேஸ்வரில் உள்ள ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் விலங்குகளின் உணவு பிரிவில் முதுகலை பட்டப் படிப்பை முடித்தார். அதன் பிறகு 2003-ல் மூன்றாவது முயற்சியில் யூ.பி.எஸ்.சி. யில் தேர்வாகி ஐ.ஏ.எஸ். ஆனார்.

"கால்நடை மருத்துவம் படித்து விட்டு, முதல் இரண்டு முறை விலங்கியல், புவியியலை விருப்பப் பாடங்களாக எடுத்தது தவறு என்பதை உணர்ந்தேன். ஆகவே, மூன்றாவது முயற்சியில் இரண்டாம்நிலை தேர்வில் விலங்கியலுக்குப் பதிலாகக் கால்நடை அறிவியலை எழுதி வெற்றி பெற்றேன். சென்னையிலும் டெல்லியிலும் உள்ள பயிற்சி மையங்களில் படித்தும் அவை எனக்குக் கைகொடுக்கவில்லை. இதனால் நானே அன்றாடம் 8 முதல் 10 மணி நேரம்வரை படித்தேன்.

குறிப்பாக ஏற்கெனவே யூ.பி.எஸ்.சி. எழுதித் தோல்வி அடைந்தவர்களிடமிருந்து பல ஆலோசனைகள் பெற்றேன். தோல்வியைத் தழுவியவர்கள் செய்த தவறுகளைத் தெரிந்துகொண்டால் அவற்றைத் தவிர்க்கலாம். இது மட்டுமல்லாமல், தமிழகப் பிரிவு கண்ணன் ஐ.பி.எஸ்., அனந்தகுமார் ஐ.ஏ.எஸ்., உத்தரகண்டின் மீனாட்சி சுந்தரம் ஐ.ஏ.எஸ்., யுவராஜ் ஐ.ஏ.எஸ். ஆகிய வெற்றியாளர்களிடம் கிடைத்த ஆலோசனையும் பெரிதும் உதவியது" என்கிறார் முத்துகுமாரசாமி.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக